சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளது. இதற்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே நோட்டிஸ் வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். 6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பலன்கள். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த மாதம் (ஜூலை 19) 19ந்தேதி அன்று  போக்குவரத்து கழகங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை  மேலாண் இயக்குநர் களிடம் சிஐடியு வழங்கியது.   இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாமிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை, துணைப்பொதுச் செயலாளர் எம்.ரவிசங்கர் உள்ளிட்டோர் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கினர். அதனப்டி,  ஆகஸ்ட் 3 அன்று அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. இந்த  வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு தொழிலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எந்த விடுப்புகள் தரப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும் எனவும், பணியாளர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.