சென்னை: மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம்மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில், நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (27.10.2022) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை  வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை  தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கிணங்க வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் திட்டக் குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய பத்து கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள மூன்று கொள்கைகளான (1) ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை – மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா (2) தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை (3) திருநர் * நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஒக்கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் திரு. ஜெ. ஜெயரஞ்சன்,திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  விக்ரம்கபூர், இ.ஆ.ப., ஆகியோர் இக்கொள்கைகள் குறித்து விளக்கினர்.

அதனைத்தொடர்ந்து, தொழில் மயமாதல் கொள்கை குறித்து, திருமதி மல்லிகாசீனிவாசன் அவர்களும், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து மரு. அமலோற்பவநாதன் அவர்களும் மற்றும் திருநர்  நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜ் அவர்களும் விவரித்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான ஸ்டாலினிடம்,  தலைமைச் செயலகத்தில்,மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, கைத்தறி துறை, துணிநூல் துறை சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் தொழில் மயமாதல் கொள்கை அறிக்கைகளை வழங்கினார்கள். அதையடுத்து, மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார நலக்கொள்கை அறிக்கையை வழங்கினார்கள் தொடர்ந்து,  ,மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட திருநர் + நலக்கொள்கைகள் அறிக்கையை வழங்கப்பட்டது.