சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோவையில் உள்ள மசூதி ஒன்றில்  மதகுருவாக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த ஒருவர் வீட்டில்  காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு மீண்டும்  கோவை விரைந்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரை  கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோவில் முன்பு  கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் வெடி விபத்தில், காரில் இருந்து வெடிகுண்டில் உபயோகப்படுத்தும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால், இது தற்கொலை தாக்குதலா அல்லது பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து வெளியான வீடியோ மற்றும், முபின் உடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகஅரசு மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை எற்படுத்தியது. இதையடுத்து கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் அடுத்தகட்ட விசாரணையை தேசிய புலனாய்வு முகாமையான என்ஐஏ மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் பரிந்துரை செய்து இருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கோவை கார் வெடிப்பு விபத்தை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,  கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக, கோவையில் மதகுருவாக பணியாற்றி வந்த, நெல்லை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் லெப்பை என்பவரது வீட்டில் நெல்லை மாநகர் துணை ஆணையர் அனிதா தலைமையில் காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.  முகமது உசேன் கோவையில் மதகுருவாக இருந்துள்ளது தெரிய வந்த நிலையில், அவருக்கும் இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கியவர்களுக்கும் தொடர்ப இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சுமார் 4மணி நேரம் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்து   லேப்டப், செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவைகளை ஆய்வு செய்வது வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மீண்டும்  கோவைக்கு சென்றுள்ளார். அங்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கு என்ஐஏ கைக்கு சென்றுள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.