துாத்துக்குடி :
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ள சிபிஐ, ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அதுதவிர, காவலர்கள் சாமத்துரை, வெயில்முத்து, செல்லத்துரை ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, சாத்தான்குளம் வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பவ இடத்தில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட்டு பாரதிதாசன் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி அவர் தாக்கல் செய்த அறிக்கையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, காவல் நிலையத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்ட கடந்த 19ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து  சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டிருந்தன. சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த , மாநில மனித உரிமை ஆணையம், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் இது தொடர்பாக நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.