பெங்களூரு: தீவிரவாதம், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா, எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: ஒரு அமைப்பை, இயக்கத்தை தடை செய்யும் முன்பு, அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது.

எனவே, ஆதாரங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம். இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர், முறைப்பட அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, என்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது என சட்டத்துறை வல்லுநர்களிடம் ஆலோசனை பெற உள்ளோம்.

சிமி போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் முகங்களாக கருதப்படும் இந்த அமைப்புகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. 7 முதல் 8 ஆண்டுகளாக கர்நாடகாவில் தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.