டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே சட்டம்  இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலஅரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

மக்களவையில் திமுக எம்.பி. பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு  மத்திய, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்தார். அப்போது; பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது.

7-வது அட்டவணை, 34-வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளே இயற்ற முடியும். சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் அணுராக்தாக்கூர் கொடுத்துள்ள பதிலில், பந்தயம் மற்றும் சூதாட்டம்” என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல்-II-இன் 34ஆம் அம்சமாக வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. அதன்படி, மாநிலங்கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் ஆன்லைனில் கிடைக்கும் சூதாட்டத்தை சமாளிக்க தங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன.

திறமை விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகள் இடையே வேறுபாடு குறித்து நீதித்துறை தீர்ப்புகள் உள்ளன. திறன் விளையாட்டுகளில் வெற்றி பெற கணிசமான அளவு திறன் தேவைப்படும். விளையாட்டுகளை குறிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல, பெரும்பாலும் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள் ‘சூதாட்டம்’ என இந்திய சட்டங்களின் கீழ் கருதப்படுகிறது.

துறைப் பணிகள் விதி ஒதுக்கீடு திருத்தத்தில் 23.12.2022 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் “ஆன்லைன் கேமிங்” என்ற விவகாரம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeiTY) ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஆன்லைன், சூதாட்டத்தை தடுக்கும் சட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்றினாலும், அவற்றின் அமலாக்கத்தை ஒழுங்குபடுத்தும் துறையாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை இருக்கும் என்று அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல பணத்தை  முக்கியமாக அடிப்படையாக கொண்ட விளையாட்டுகள் வாய்ப்பு இந்திய சட்டங்களின் கீழ் ‘சூதாட்டம்’ என்று கருதப்படுகிறது. (வணிக விதிகளின் ஒதுக்கீட்டில் திருத்தம் மூலம், 1961 அறிவிப்பைப் பார்க்கவும்)  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு,  திமுக எம்பி. தமிழச்சி ஆன்லைன் ரம்மி தொடர்பாக கேள்வி எழுப்பிபோது, அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் கேமிங் விவகாரத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மத்திய-மாநில மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில்,  அதிகாரப்பூர்வமாக தீர்வு காண, ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு, மத்திய சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் கட்டுப்படுத்தப்படும் என்று   தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  கடந்த ஆண்டு (2022) டிசம்பரில்,  ஆன்லைன் கேமிங் போன்ற விளையாட்டுக்களை  ஒழுங்குப்படுத்துவதற்காக மத்தியஅரசு புதிய விதிகளை வெளியிட்டிருந்தது.  அதன்படி ஆன்லைன் கேமிங்கை இப்போது ஐடி அமைச்சகம் கட்டுப்படுத்துகிறது.

இந்த ஆன்லைன் விளையாட்டுக்கான விதிகளை வகுப்பது உள்ளிட்ட விவகாரங்களை கவனிப்பதற்காக நோடல் ஏஜென்சியாக, இதை கண்காணிக்கும் அமைப்பாக இனி மத்திய அரசினுடைய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த அமைச்சகம் சார்பில் தான் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான அனைத்து விதிகளும் வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.   ஆன்லைன் கேமிங்கிற்கான அமைச்சகத்தை முக்கிய அமைச்சகமாக மாற்ற வணிக விதிகளின் ஒதுக்கீட்டை மையம் திருத்தியது.

மத்திய அரசினுடைய மின்னனும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை நோடல் ஏஜென்சியாக நியமித்து இருப்பதை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிகளைக்காட்டிதான், தமிழ்நாட்டிலும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெத்திட மறுத்துள்ளார். தமிழக அரசு, ஆன்லைன் கேமிங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரலாம். இதைத்தான் தற்போது அமைச்சர் அனுராக்தாக்கூரும் தெளிவுபடுத்தி உள்ளார்.