சென்னை:
காராஷ்டிரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி, மகாராஷ்டிரா மாநில முதல்வரிடமும், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுடனும்  திமுக சார்பில் ஆலோசித்துள்ளோம். அவர்களும் அனுப்பிவைக்க தயாராக உள்ளனர். எனவே தமிழக அரசு  காலம் தாழ்த்தாமல் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது,
, திமுகவின் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தில், மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனை மூலமாக, அவர்கள் இந்த கரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது.இதுகுறித்து, மகாராஷ்ரம் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் தி.மு.க.,வின் தலைவர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தெரிவித்தேன். கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் மகாராஷ்டிர முதல்வரிடம் கலந்தாலோசித்துள்ளார்.
தமிழகத் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடமும், டி.ஆர்.பாலு விவரத்தைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்ட்ரத்திலிருந்து தமிழகத்திற்குத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.
தமிழகத் தொழிலாளர்களை மகாராஷ்டிராவிலிருந்து திரும்ப அழைத்து வரவேண்டும் என்பது குறித்து பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ராவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
தமிழக அரசு காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும் மகாராஷ்டிர மாநில அரசிடமும் தொடர்புகொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத் தொழிலாளர்களுக்கான பயணச் செலவிற்கானப் பொறுப்பினையும், அவர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு, அழைத்து வருமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.