சென்னை:

தி.மு.க கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரத்தை திமுக தலைவரும், கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதிகளிலும், இதர கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இதில் காங்கிரஸ் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பது குறித்தும் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

இந்த நிலையில்,  தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை நாளை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலை யில் தொகுதி விவரங்களை மு.க.ஸ்டாலின். அறிவிக்கிறார்.

முன்னதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமும் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அவரை போனில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

அதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஸ்டாலினை சந்தித்து  தங்களது ஆதரவை தெரிவித்தனர்.