தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் .கவர்னர் இணைந்திருப்பதுபோன்ற புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு முன்னுதாரணமே, இந்த நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினின் வியூகம் மகத்தான வெற்றியை தந்திருக்கிறது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வரும் ஸ்டாலின், கூட்டணியைச் சிதறவிடாமல் வழிநடத்தி மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். இந்த தேர்தலில், திமுக மட்டுமே 128 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.
பெரும்பான்மையான இடங்களை திமுக வென்றுள்ளதால் 10 வருடங்கள் கழித்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. ஆறாவது முறையாக திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்ப்பட்டதுடன், அவருடன் 34 பேர் கொண்ட புதிய அமைச்சசரவையும் பதவி ஏற்றது.
கடந்த 7 ம் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்பட சிலர் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தின்போது, கவர்னர் பன்வாரிலால், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், முன்னாள் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் ஸ்டாலின் ஒரே மேஜையில் அமர்ந்து, சகஜமாக பேசிக்கொண்டு தேநீர் அருந்தியது பெரும் வியப்பதை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்த புகைப்படத்தை தலைமைச்செயலகத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, தலைமைச்செயலகத்தின் 6வது வாசலில் வைக்கப்பட்டு உள்ளது. இதை பார்ப்போர், இது தமிழ்நாடுதா என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலைமைச்செயலக வரலாற்றில், ஆளும் கட்சியினர் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக எதிர்க்கட்சியினருடன் முதல்வர் அமர்ந்துள்ள புகைப்படத்தை வைத்து, மு.க.ஸ்டாலின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தை ஆட்சி செய்த, மறைந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் பதவி ஏற்பு விழாவின்போது, எதிர்கட்சியினருக்கு சம்பிரதாய மாக மட்டுமே அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் கலந்துகொண்டபோது அவருக்கு கடைசி இருக்கையே ஒதுக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
ஆனால், மு.க.ஸ்டாலினோ, பழைய நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு, தனது பதவி ஏற்பு விழாவில்கலந்துகொண்ட எதிர்க்கட்சியிருக்கு உரிய மரியாதை வழங்கினார். இதற்கு சாட்சியாக, நிகழ்ச்சிக்கு புன்னகையுடன் வருகை ஓபிஎஸ்-ன் புகைப்படமே சாட்சி.
பின்னர் பதவி ஏற்றதும், பதவி ஏற்றதும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருடன் அவர் இயல்பாக அமர்ந்து ஸ்டாலின் தேனீர் அருந்தினார். இதற்கு அந்த புகைப்படங்களே ஆதாரம். தற்போது, அந்த ஆதாரம் தலைமைச்செயலக வாசலிலும் பளிச்சிடுகிறது.
எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியினரான பாவித்து வந்த தமிழக அரசியல் கலாச்சாரத்தில், எதிர்க்கட்சி யினருக்கும் மரியாதை அளித்து,அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தலைமைச்செயலகத்தில் வைத்து, அழகு பார்க்கும் ஸ்டாலின் நடவடிக்கை, ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே உள்ளது. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு, தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளை பார்க்கும்போது, இனிமேல் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலே நடைபெறும் என்பதை உறுதி செய்யலாம்.
தமிழகத்தின் இன்றைய தேவை ஒற்றுமையே என்பதை வலியுறுத்தும் வகையில் ஸ்டாலின் எடுத்து வரும் அரசியல் நடவடிக்கை தமிழக அரசியலில் உதய சூரியனாக உதயமாகி உள்ளது.
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே என் லட்சியம் என அவர் பிரகடனப்படுத்தி பதவி ஏற்றுள்ள ஸ்டாலின், கடந்த காலத்தில் அமைந்த ஊழல் அரசைப் போல் அல்லாமல், நல்லாட்சியை வழங்குவார், அதற்குரிய வலிமை அவருக்கு உண்டு என்பதை அவரது சமீபகால நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலின் மகத்தான வெற்றி, எதிர்க்கட்சியினருக்கு உரிய மரியாதை, மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள், அதிரடி அறிவிப்புகள் மூலம் முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியைப் போல் ராஜதந்திரம் மிக்கவர், ஆளுமை மிக்கவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நல்லாட்சி தொடரட்டும்… தமிழகம் வளம் பெறட்டும்…