சென்னை:
ஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு  தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ். ஈஷா யோகா மையம் தொடர்ந்து பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் ஈடுபட்டு வருவதாக சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஈஷா மையம் நடத்தும் ‘மகா சிவராத்திரி’ விழாவால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் வன விலங்குகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஈஷா மையம் மறுத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஜக்கி வாசுதேவ், பாஜக அரசுக்கு ஆதரவாகவும், வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவாகவும் அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அவர், தமிழக அரசு பராமரித்து வரும் கோயில்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இப்படியான சூழலில் அமைச்சர் சேகர் பாபு, ஈஷா மையம் மீது விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். இதை சுற்றுச்சூழல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ வரவேற்றுள்ளனர். மேலும் அவர்கள், ‘ஈஷா மையத்துக்கு எதிராக எங்களிடம் உள்ள தரவுகளை தரத் தயாராக இருக்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளது.