சென்னை: அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். அதுபோல முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் மரியாதை செய்தார்.

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி என்று அறியப்படுகிறது. சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், மொழியுணர்வு, இன உணர்வு போன்ற கொள்கைகள் கொண்ட பண்டிதர் அயோத்தி தாசர், நவீன இந்தியாவில் மாபெரும் அறிஞருள் ஒருவர்.
அண்டம், பிண்டம் என இரண்டொன்றும் ஏதுமில்லை. ஆதி சங்கரர் நிறுவிய அத்வைத தத்துவ நூல்களை படித்ததால் 1870ஆம் ஆண்டு தனது 25வது வயதில் அத்வைத அமைப்பை நிறுவி அதன் மூலம் பழங்குடி மக்களை திரட்ட எண்ணினார். பழங்குடிகளான தமிழர்கள் தாழ்த்தப்படுவதை, புறக்கணிக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் துடித்தார் அயோத்தி தாசர். அத்வைத அமைப்பில் சனாதன போக்கு இருப்பதால் பின்னாளில் அதனை கைவிட்டார்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும், மக்கள் தமிழராக இருந்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பதை உணர்ந்த அயோத்தி தாசர் 1891 ஆம் ஆண்டு ‘சாதியற்ற திராவிட மகாஜன சபையை’ உருவாக்கினார். இலக்கியம், சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்ட, இவர் தலித் மக்களின் விடுதலைக்காக பெரிதும் போராடினார். தனது வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை எதிர்த்து போராடிய அயோத்தி தாசரை தந்தை பெரியார் தனது முன்னோடி என அறிவித்துக்கொண்ட வரலாற்று பிண்ணனியும் உண்டு.
அவரது பிறந்தநாளை தமிழ்நாடு அரசு அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி இன்று (மே 20ந்தேதி) அவரது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். காந்தி மண்டபத்தில் அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து அமைச்சர் பெருமக்களும் மரியாதை செய்தனர். பின்னர் குழு புகைக்பபடம் எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய #திராவிடப்_பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக! மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள். அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது; அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை #DravidianModel-க்குக் கிடைத்திட்ட பெரும் பெருமை! சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, ‘தமிழன்’, ‘திராவிடன்’ ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்! என குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]