சென்னை:
பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரத்தில் இருந்து டெல்லி திரும்பிய ராகுல் காந்தியை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தியிடம் ‘திமுக உங்களுக்கு முழு ஆதரவு தரும்’ என்று பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.