சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிப்பெற்றுள்ள நிலையில், வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின்  சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 2வது கட்டமாக ஏப்ரல் 18ந்தேதி தமிழ்நாட்டில் 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து ஏப்ரல் 19ந்தேதி 4 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை வந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் தமிழக்ததில் தேர்தல் நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதியில் 37ஐ திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக திமுகவினர் உற்சாகத்தில் மகிழ்ச்சியை வெடி வெடித்தும்,  இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவருக்கு அங்கு  திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஆராவார வரவேற்பு அளித்தனர். அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஸ்டாலின்,  அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் திருவுருவச் சிலைகளின் கீழ் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது,  தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி; இந்த வெற்றி மாலையை தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

அதைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற,  ஸ்டாலின் அங்கு தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தாயார் தயாளு அம்மையார் அவர்களிடம் ஆசிபெற்றார்.

அதையடுத்து,  மெரினாவில் உள்ள  கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று  மரியாதை செலுத்தியனார். அப்போது,  மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்றுள்ள மாபெரும் வெற்றியை, தலைவர் கலைஞருக்கு சமர்ப்பித்தார்.