சமீபத்தில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “தோற்கும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த ஓ.பன்னீர் செல்லவம் புத்திசாலி” என்று நையாண்டியாக பேசியுள்ளார்.
பன்னீர் செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் இதைக் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொள்ள வேண்டுமென்று அதீர பிரயத்தனம் செய்தார் பழனிச்சாமி. அதற்கு, பன்னீர் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை வந்தது. பின்னர், இழுபறி மற்றும் சமரசங்களுக்குப் பின்னர், பன்னீரே, பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்.
இந்தப் போட்டியில் பன்னீர் செல்வம் தோற்றுப்போய் விட்டார் என்றே அப்போது பலரும் கூறினார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பழனிச்சாமி கேட்டுக்கொண்டதால்தான் நான் அவ்வாறு அறிவித்தேன் என்றும், கட்சிக்கு தான்தான் ஒற்றை தலைமை என்றும், தனக்கு உதவியாகவே பழனிச்சாமி இருக்கிறார் என்றும் ஒரு பேட்டியளித்து, பழனிச்சாமியை கடுப்படித்தார்.
மேலும், இதுதொடர்பாக பேசிய சில அரசியல் விமர்சகர்களும், இந்தத் தேர்தலில் அதிமுக தேறாது என்பதை தெளிவாக உணர்ந்தே, எதற்காக தன் சக்திகளை விரயமாக்கிக் கொள்ள வேண்டுமென கணக்கிட்டே, பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனது புத்திசாலித்தனத்தைக் காட்டினார் பன்னீர் என்றனர்.
தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினும், போடி பிரச்சாரத்தில், அதே கருத்தை வெளிப்படுத்தி, அதன்மூலம், பழனிச்சாமியை சீண்டுவதோடு, பன்னீர் செல்வத்தையும் வம்பிழுக்கிறார்.