ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

Must read

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படாமல் பின்வரிசையில் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
திமுக தலைவர் கருணாநிதி, ”முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து, பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.  வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

ஜெ. பதவி ஏற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்
ஜெ. பதவி ஏற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்

அதே நேரம்  ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ”தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்” என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விழா அரங்கில் எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதவி வரிசைப்படியே இருக்கையை ஒதுக்கியுள்ளனர்.
எனவே, ஸ்டாலின் அவர்களுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை.
"மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகள்" - ஜெயலலிதா
“மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகள்” – ஜெயலலிதா

ஒருவேளை, ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன்.
மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

More articles

Latest article