சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை ஐகோர்ட்டு.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. ஆனால், இதுவரை சட்ட மன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்ற சபாநாயகரிடமும், தமிழக அரசிடமும் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்க உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில் இன்னும் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உரிமைக்குழு, மதிப்பீட்டுக் குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, உடனே குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என புகார் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவை முன்னவர், தமிழக சட்டமன்ற செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.