டில்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. .

இந்த வழக்கின்போது, அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பாக ஆஜரான பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியும் தமது வாதத்தை எழுத்துப்பூர்வமாக  தாக்கல் செய்தார். முன்னதாக நடைபெற்ற வாதத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

பசுவிற்கு வலிக்கும் என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம் என மத்திய அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை வைத்தார். மேலும், ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு  அல்ல, அது ஒரு திருவிழா என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகும் என்று உச்சநீதிமன்ற  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, நீதிமன்ற உத்தரவு வரும் வரை அவசர சட்டம் குறித்த கேள்விக்கே  இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதேவ் , “தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்போம்.  ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருக்கிறது” என்றார்.

ஆகவே,  அனவைரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

“காளை மாடுகளை காட்சி விலங்காக மாற்றிய சட்டத்தில் திருத்தம் செய்யாத நிலையில், உச்சநீதிமன்றம் வாதத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக கிடைக்குமா” என்ற கேள்வியும் எழுந்துள்ளது..