நாகை: மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று கொல்லைப்புற வழியாக திமுக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்க்கான நோபல் பரிசை  வழங்கலாம் என முன்னாள் முதல்வரும்  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  காட்டமாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை நிகழ்ச்சியில் பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதிவாரியான பிரசாரத்தை ‘சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வருவது போல் பேருந்து எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்’ என கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, : மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று கொல்லைப்புற வழியாக திமுக ஆட்சி அமைத்தவர் ஸ்டாலின் என்றும்,  ஸ்டாலினுக்கு பொய்க்கான நோபல் பரிசை  வழங்கலாம் என கூறியதுடன், ஊழல் செய்து அவர் சேர்த்திருக்கும்  பணத்திற்கு பென்ஸ் கார், ஹெலிகாப்டரில் கூட பரப்புரைக்கு வரலாம் என  கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்”  என்ற பிரச்சார பயணத்தை  தொகுதிவாரியாக மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத் திட்டத்தின்படி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை (ஜூலை 17) சீர்காழி தொகுதிக்கு சென்றார். தொடர்ந்து மேலமுக்கூட்டு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

“அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு திமுக தன்னுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டது.

மக்களின் விவசாய விளை நிலங்களை பறித்து மீத்தேன் மற்றும் ஈத்தேன் திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

தினந்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து போஸ் கொடுப்பது தான் மு.க.ஸ்டாலின் பணியாக உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் தற்போது வரை 10 சதவீத அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை.

மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, கொல்லைப்புறத் தின் வழியாக ஆட்சி அமைத்த அரசாங்கம் திமுக. தற்போது 100 நாள் வேலைத்திட்டம், 50 நாட்களாக மாற்றப்பட்டு விட்டது.

திமுக ஆட்சியில் சொல்வது அனைத்தும் பொய்தான். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது மு.க.ஸ்டாலினுக்கு தரலாம்.

பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றவில்லை. இதுவே ஸ்டாலினின் ‘டபுள் கேம் ’.

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் இந்த அரசு தேவையா? போராட்ட களமாக தமிழ்நாடு உருவாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு இடமில்லை. யார் அதிகமாக ஜால்ரா தட்டுகிறார்களோ, கப்பம் கட்டுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம்.

சட்ட விரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தி, நேர்மையாக செயல்பட்டதற்காக மதுவிலக்கு DSP-யின் அரசு வாகனம் பிடுங்கி அவரை மிகவும் அசிங்கப்படுத்தி உள்ளனர்.

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, காமராஜர் குறித்து அவதூறாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அவை கண்டிக்கத்தக்கது, இதற்கு 2026 பொதுமக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் பேருந்தில் பரப்புரை செய்வதால், ‘சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வருவது போல் பேருந்து எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை கடுமையாக விமரிசித்துள்ளார்.

நான் விவசாயி; இந்த வாகனத்தில் தான் வருவேன். உங்களுடைய அறக்கட்டளையில் மட்டும் ரூ.8,000 கோடி உள்ளது. நீங்கள் பென்ஸ் கார், ஹெலிகாப்டர் அல்லது தனி விமானத்தில் கூட வரலாம். நான் இது போன்ற பேருந்தில் தான் வர வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஓட்டை உடைசல் பேருந்துகள் உள்ளது. நீங்கள் எனது பேருந்தை பற்றி பேசுகிறீர்களா? இது மண்வெட்டி பிடித்த கை; ஏர் ஒட்டிய கை. உங்களைப் போன்று கோட் சூட் போட்டுக்கொண்டு போட்டோ எடுக்க தெரியாது.

நீங்கள் வந்த பாதை வேறு; நான் வந்த பாதை வேறு. உங்களை போன்று தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை. உழைத்து அதிமுகவில் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன்.

உதயநிதி திமுக கட்சிக்கு என்ன செய்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் துரைமுருகன் கட்சியை வளர்த்தார். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவில்லை. அக்கட்சியில் ஜனநாயகம் உள்ளதா?‘

இவ்வாறு கூறினார்.