சென்னை: சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். அதற்காக அந்த சிறுவன் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.ஸ்டாலினை  தாத்தா என்று அழைத்து சிறுவன் போனில் பேசிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி  இலங்கு, தீபா இவர்களது மகன் ஹரிஷ்வர்மன் வயது 7. ஹரிஷ்வர்மன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார்.கொரோனாவின் இரண்டாவது அலையால்  ஒட்டு மொத்த நாடே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதை  கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினர் ரொக்கமாகவும் மருத்துவ பொருட்களாகவும் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை கொடுத்து வருகின்றனர்.

இதனை உணர்ந்த இந்த பிஞ்சு தான் சிறுக சிறுக உண்டியலில் சைக்கிள் வாங்க சேமித்திருந்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறியத்தொகையாக இருந்தாலும் சமூகத்தின் மேல் அந்த சிறுவனுக்கு இருந்த அக்கறை கண்டு மனம் நெகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமில்லாமல் சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதிய சைக்கிள் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.  மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி  ஹரிஸ்வர்மனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சைக்கிள் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.