திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவமத்தை  அண்ணாமலை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார் என்று  அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டி உள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில் கூட்டம் அலை மோதி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்களுக்கும்  இடையே கேடந்த செவ்வாய்க்கிழமை கைகலப்பு ஏற்பட்டதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர  மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு பெருமாளை வழிபட வரிசையில் காத்திருந்தனர். விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு காலை 7 மணியளவில் முதல் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சேவைக்காக மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தங்களை விரைந்து சேவைக்கு அனுமதிக்கும்படி அங்கிருந்த உண்டியலைத் தட்டி கோஷ மிட்டுள்ளனர்.

இதை அங்கு காவல் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தட்டிக் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம் அருகே ரத்தம் சிந்தியதால், மூலவர் ரங்கநாதர் சன்னதியின் நடை சாத்தப்பட்டு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.  வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவம் பக்தர்கள், கோயில் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் பேசி வெளியே அழைத்து வந்தனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கோயில் பாதுகாவலர்கள் 3 பேர் மீது சென்னா ராவ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாவலர்கள் பரத், செல்வகுமார், விக்னேஷ் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் உள்ளே நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார், மூவரிடமும் தகவல் பெற்றுள்ளனர்.

நீண்ட நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்தபோது, அவர்களை நிறுத்தி விட்டு, சில விஐபிக்களை கோயில் ஊழியர்கள் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றதாகவும், இதனால், ஆத்திரமடைந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் கோஷமிட்டதைத் தொடர்ந்து இந்த கைகலப்பு சம்பவம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால்,  இதை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து, போராட்டங்களை நடத்தியது. 

இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை என தி.மு.க அரசை சாடியிருந்தார்.

இந்த நிலையில், எசென்னை சேத்துபட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு;  ஸ்ரீரங்கம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்ரீரங்கம் பிரச்சினை, பக்தர்கள் – அங்கு பணியாற்றிய காவலர்கள் இடையேயான பிரச்சினை. நேற்றே பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்பட்டுவிட்டது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக நடக்கும் பிரச்சனைகளுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் சாயம் பூசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்;

மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தார் அது நடக்கவில்லை என்பதால் தற்போது ஸ்ரீரங்கம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் என தெரிவித்தார்.