சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என பொன்முடி வழக்கை விசாரித்து, அவரை விடுதலை செய்த ஓய்வுபெற்ற  வேலூர் நீதிபதி எசென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு  கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், அவர்கள் நீதிமன்றத்தால் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  திமுக  அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை விடுவித்தும், விடுதலை செய்தும் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார்.  அப்போது, இதுபோன்ற வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தியாக செயல்படுகிறது என்றும்,  கீழமை நீதிமன்றங்களையும் கடுமையாக சாடியிருந்தார்.

தற்போது இந்த வழக்குகளை    நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையின்போது,   , சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தானும் சேர்க்கப்பட்டுள்ளதால் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடத்து வழக்கின் விசாரணை யை ஜனவரி 8ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இந்த வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்துவிளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இதற்கிடையில்,  அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் – வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு  கடிதம் எழுதி உள்ளார். அதில்,  மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளதுடன்,  எனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளார். தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தேவையற்ற கருத்துகளால், 28 ஆண்டுகள் தான் கட்டிக்காத்த பணி நேர்மை பறிபோனதாக ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலா வேதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பான வழக்கை  வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நிராகரித்தார். மறு ஆய்வு செய்வதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.