திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ரங்க… ரங்கா… கோஷங்களை எழுப்பி திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள். விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தோ்த் திருவிழா,கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. . இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும்  காலை மாலை வேளையில், ஒவ்வொரு வாகனங்களில் நம்பெருமாள் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.. இதையடுத்து அதிகாலை 5.30 மணி முதல் அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருனினார். இதைத்தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா… ரங்கா என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

திருத்தேரானது  திருகீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடையும்.

ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த பகுதியில் தயார் நிலையில் மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறையினர் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.