ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

ஸ்ரீ ரெங்கநாயகித் தாயார் ஸமேத ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், முதன்மை திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

இத்தலத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள திருக்கோவிலே ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவிலாகும்.

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இத்தலம் “பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. லக்ஷ்மி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும்.

மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனைப் போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்பராமாயணத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் (தாயார் சன்னதிக்கு அருகில்).

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே  பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

சோழ நாட்டுக் காவிரி ஆற்றுக் கரையில் அமைந்துள்ள முதல் தலம்.

ஸ்தல வரலாறு :-

திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டுத் தோன்றியதாகும் (இதை ஸ்வயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.

பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த சிலையைத் தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்குச் சிலையைக் கீழே இறக்கி வைக்கக் கூடாது என்று எண்ணினான்.

அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து விட்டு கீழே வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான்.

அச்சமயம் சிறுவன் சிலையைக் கீழே வைத்து விட்டான், பின்னர் விபீஷணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையைக் கீழே வைத்ததைக் கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையைக் கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார்.

அவ்விநாயகர்க்குக் காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.

பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராகக் காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்குச் சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார்.

விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்ம வர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார்.

பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலைக் கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்று அழைக்கப் பெற்றார், அக்கோவிலைப் புனரமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலைக் காட்டினார் கிளி சோழன்.

அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.