கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது.

அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால்  பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து மார்ச் மாதம்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடக்கவில்லை. 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்தது.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியிலும் மக்கள் சமூக இடைவெளியுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.  இலங்கை முழுவதும் மாலை 4 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இம்முறை ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.