கொழும்பு

குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.

நேற்று முன் தினம் நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதனால் இலங்கையில் கடும் பதட்டம் உண்டானது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 300 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கையில்  12 மணி நேரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நேற்று காலை அது விலக்கிய பிறகும் பதட்டம் தணியாததால் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இந்த குண்டு வெடிப்புக்கு உலகெங்கும் உள்ள அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று இலங்கை அதிபர் சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. அப்போது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இன்று இலங்கை பாராளுமன்றம் அவசரமாக கூட உள்ளது. அந்த கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச உள்ளனர். அதன் பிறகு விவாதம் நடைபெற உள்ளதாக இலங்கை செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.