மதுரை: இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா. இவரது உடல் மதுரையில் சில தினங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், லொக்கா காதலி அமானி தான்ஜி, மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, திருப்பூர் தியானேஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் இருந்து டிஎஸ்பி பரமசாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு மதுரையில் நேரடி விசாரணை நடத்தியது. சி.பி.சி.ஐ.டி. போலீசார், சிவகாமி சுந்தரி வீடுகளில் 3 நாட்களாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அவர்களுக்கு மதுரையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரி ஒருவர் உதவினார். 10 நாட்களாக அவர்களுடன் துணையாக இருந்து வழக்கை விசாரித்து வந்தார். அந்த அதிகாரிக்கு இப்போது கொரோனா உறுதியாகி உள்ளது.

ஆகையால் வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  குழுவில் உள்ள மற்ற சிபிசிஐடி போலீசாரும் தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையில் உள்ளனர்.