கோவை: கொரோனா பரவலால் சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது என்று கோவை ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதன்காரணமாக இந்தாண்டு சுதந்திர தின விழா வரும் 15ந் தேதி எளிமையாக நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.  இந் நிலையில் கோவையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறியதாவது:

கோவையில் இந்த ஆண்டு சுதந்திர தின விழா வரும் 15ந் தேதி வஉசி மைதானத்தில் வழக்கம் போல் நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் அணிவகுப்பு மட்டும் நடைபெறும். சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களது வீட்டிற்கு சென்று கவுரவிக்க திட்டமிட்டுள்ளோம்.

விழாவை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவில், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், வருவாய் துறையினர், உள்ளாட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரில் 50 பேரை தேர்வு செய்து கவுரவிக்க உள்ளோம். அரசு தரப்பில் 50 பேர் மட்டுமே பங்கேற்பர்.

அதே போல் பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின விழாவில் கூட்டம் கூட அனுமதி இல்லை. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டுமே கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இங்கு சராசரியாக 140 முதல் 160 பேர் வரை தினமும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஊரக பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இல்லை என்றார்.