கண்டி: வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகளே உள்ளன.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. தற்போது, முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் தமிம் இக்பால் 90 ரன்கள் அடிக்க, நஜ்முல் ஷன்டோ 163 ரன்களும், கேப்டன்  மொமினுல் ஹேக் 127 ரன்களும் விளாசினர்.

முஷ்பிக்குர் ரஹிம்(68 ரன்கள்), லிட்டன் டாஸ்(50) அரைசதங்கள் அடித்தனர். இதனால், 7 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 541 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர் திமுத் கருணரத்னே, இரட்டை சதம்(234 ரன்கள்) அடித்து இன்னும் களத்தில் உள்ளார்.

தனஞ்ஜெயா டி சில்வா 154 ரன்களுடன் களத்தில் உள்ளார். லஹிரு திருமன்னே 58 ரன்கள் அடித்தார். தற்போது, 4வது நாள் ஆட்டம் முடிந்துவிட்ட நிலையில், இலங்கை அணி, 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இன்னும் 29 ரன்களே பின்தங்கியுள்ளது.

இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்தப் போட்டி 100% டிராவில் முடியும் என்பது உறுதியாகியுள்ளது.