டில்லி

கொரோனா பரவல் அதிகரிப்பையும் மீறி நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகள் இனி வராது என இந்திய எக்ஸ்பிரஸ் நாளேடு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் பல வரலாறு காணாத உச்சங்களை அடைந்து வருகிறது.  இதையொட்டி நாடெங்கும் வழிபாட்டுத் தலம், பொழுதுபோக்கு தலங்கள் உள்ளிட்டவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.   ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ள அறிக்கையில்

 

”அன்புள்ள வாசகர்களே,

இந்தியா கொரோனா பரவலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.  இந்த கொடுமைக்குச் சர்வதேச சுகாதார நலத்துறை எதுவும் தீர்வு அளிக்காத நிலையில் உள்ளது.  சுகாதாரத்துறை  அமைச்சகம் வெளியிடும் தினசரி பாதிப்படைந்தோர் மற்றும்  மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிர வைக்கிறது.   

அதைப் போல் தனியார் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து ஆக்சிஜன் தேவை, உயிர் காக்கும் மருந்துகள் குறித்த வேண்டுகோளும், அதிகரித்து வருகிறது.  படுக்கைகள் காலி இல்லாததால் பல மருத்துவமனைகள் புது நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன.   நம்மில் பலர் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை கொரோனாவால் இழந்திருக்கலாம் அல்லது அவர்கள் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கலாம்.  

இந்த துயர சூழலில் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.  இது வியாபார நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.  தற்போது விளையாட்டு ஒரு பிரச்சினை இல்லை ஆனால் இந்த நேரத்தில் நடத்துவது பிரச்சினை ஆகும்.  கிரிக்கெட் போட்டிகள் நடத்துவோர் தற்போது நாம் இருக்கும் மோசமான நிலையை உணரவேண்டும்.  

எனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் சண்டே ஸ்டாண்டர்ட் மற்றும் மார்னிங் ஸ்டாண்டர்ட் உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் நிலைமை சீராகும் வரை ஐ பி எல் குறித்த செய்திகள் வெளியாகாது.  

இது நாட்டின் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையில் கவனம் செலுத்த எங்களால் முடிந்த சிறு பங்களிப்பாகும்.  வாசகர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.  நாம் இப்போது ஒரே நாடு ஒரே தீர்வு என்னும் நிலையில் உள்ளோம்

ஆசிரியர்”

 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் இந்த முடிவுக்கு பத்திரிகை.காம் தனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றது.