துபாய்

துபாயில் மாரடைப்பால் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதமாவதற்கு சட்ட நடைமுறைகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். அங்கு ஓட்டலில் குளியலறையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் நேற்றே ஸ்ரீதேவி உடல் இந்தியா எடுத்துவரப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தாமதமாகி வந்தது.

இது குறித்து துபாய் பத்திரிக்கையாளர் வாசுதேவ ராவ் கூறுகையில், ”மருத்துவமனையில் ஒருவர் இறக்கும்பட்சத்தில் எளிதில் உடற்கூறு ஆய்வு முடிந்து உடலை அளித்து விடுவார்கள். ஆனால், மருத்துவமனைக்கு வெளியே ஒருவர் இறக்கும் நிலையில், காவல்துறைக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வழக்குப் பதிவு செய்து , விசாரணை மேற்கொள்வார்கள். ஒருவேளை, இறந்தவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், கூடுதல் சட்ட நடவடிக்கைகள் உண்டு” என்றார்.

மேலும், “முதலில் அல் க்யுசைஸ் பிணவறையில் இறந்தவரின் உடல் வைக்கப்படும். பிறகு, தடயவியல் அத்தாட்சிக்கான பொதுத் துறையால் தடவியல் பரிசோதனை நடக்கும். பிறகு உடல் காவல்துறை வசம் ஒப்டைக்கப்படும். இதன் பிறகே காவல்துறையினர் தடையில்லா சான்றிதழ் அளிப்பர். பின்னர் இறந்தவரின் விசா சரி பார்க்கப்படும். துபாயில் இருக்கும் இந்தியத் தூதரகம் இறந்தவரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து, தடையில்லா சான்றிதழும், இறப்பு சான்றிதழும் அளிக்கும். இதன் பிறகே இந்தியாவுக்கு உடல் எடுத்து வர முடியும்.

இந்த ஏற்பாடுகளுக்கு இடையே காவல்துறை மேலும் பல கடிதங்களை அளிக்கும். மருத்துவமனையில் இருந்து பிரேதம் எடுத்து வரப்பட்டதா, பிணவறையில் இருந்து எடுத்து வரப்பட்டதா, எம்பால்மிங் செய்யப்பட்டதா, எங்கு செய்யப்பட்டது, எங்கு இறுதி மரியாதை நடைபெற இருக்கிறது, எந்த விமான நிலையத்தில் இருந்து எங்கு செல்கிறது, எந்த விமானத்தில் எடுத்து செல்லப்படுகிறது போன்ற அனைத்து தகவல்களும் அடங்கிய கடிதங்கள் அளிக்கப்படும்.

இறப்பு சான்றிதழ் அராபிய மொழியில் இருக்கும். இதன் ஆங்கிலப் பிரதி துபாயில் இந்திய தூதரகத்தில் அளிக்கப்படும். இதன் பிறகே தடையில்லா சான்றிதழ் குடும்பத்தினருக்கு அல்லது உறவினருக்கு அளிக்கப்படும். ஆகவே, ஸ்ரீ தேவியின் உடலைப் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக மரண சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.