மும்பை:

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படுகிறது.

துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்தார். ஸ்ரீதேவி முக்கிய பிரமுகர் என்பதால் விரிவான பிரேத பரிசோதனை நடக்கிறது என்று துபாய் தடயவியல் துறை தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு இருப்பதால் நடைமுறைகள் விரைந்து முடிக்கப்பட்டு உடல் இன்று (25ம் தேதி) இரவுக்குள் இந்தியா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடைமுறை பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் ஸ்ரீதேவி உடல் நாளை தான் இந்தியா கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவியில் உடலுக்கு மும்பை ஜூஹூ என்ற இடத்தில் இறுதி சடங்குகள் நடக்கவுள்ளது.

இது குறித்து துபாயில் வசிக்கும் நம்பிக்கை ராஜ் என்பவர் கூறுகையில், ‘‘துபாய் நாட்டு சட்டப்படி ஒருவர் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தால் மட்டுமே அது சிகிச்சை பலனின்றி இறந்ததாக இயற்கை மரணமாக கருத்தில் கொள்ளப்பட்டு எந்தவித தடங்கலும் இன்றி உடனடியாக உடல் ஒப்படைக்கப்படும்.

ஆனால் நடிகை ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டார். அதனால் அவர் சாப்பிட்ட உணவு முதல் தங்கியிருந்த சூழல், இயற்கையான மாரடைப்பா? செயற்கையான முறையில் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என முழுமையாக விசாரித்த பிறகே மருத்துவ அறிக்கை கிடைக்கும்.

தற்போது அந்த அறிக்கைக்கு தாமதமாகிறது. நாளை காலை தான் மருத்துவ அறிக்கை கிடைக்கும். அதன் பிறகே எம்பாமிங் செய்து உடலை இங்கிருந்து கொண்டு செல்ல முடியும் என்று இங்குள்ள சேனல்களில் செய்தி வெளியாகியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.