மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம்.
நவதிருப்பதிகளில் ஒன்றான அருள்மிகு மாயக்கூத்தர் சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் நான்காவது தலமாகவும் சனிபகவானின் தலமாகவும் நூற்றியெட்டுதிவ்யதேசங்களில் ஐம்பத்தைந்தாவது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.
புராணச் சிறப்பு:
நாலாம் அறிபொருளும் ஆகமபுராணமும், மெய் நவிலும் மனு சாஸ்திரமும் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்த கல்வி கேள்விகளில் சிறந்த வேதசாரன் என்பவர் அரவில் துயிலும் வேங்கட வாணனை மிகவும் பயபக்தியுடன் வழிபட்டு வந்தார். இவருடைய மனைவி குமுதவதி. இவர்களின் கடும் தவத்தால் அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்களுக்கு மகளாகத் தோன்றி கமலாவதி என்ற பெயருடன் வளர்ந்துவந்தார்.
ஆண்டாளைப் போலவே கமலாவதியும் திருமாலையே மாலையிட நினைத்து கணவனாக அடைய வழிபட்டு வந்தார். உற்றார் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி வனம் சென்று நாராயணனைக் குறித்து கடும் தவம் இயற்றினார்.
கமலாவதியின் தவத்தையும் மெச்சிய பரந்தாமனும் தை மாதம் சுக்லபட்ச துவாதசியில் பூசம் நட்சத்திரத்தில் காலாவதியை மணந்து கொண்ட கல்யாணத் திருக்கோலம் காட்டியருளினார். வேதசாரனும் தன் புதல்வி இறைவன் தன்னுடைய திருமார்பில் தரித்திருப்பதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார்.
இமயமலையில் வாழ்ந்து வந்த அச்மநாரன் என்னும் அரக்கன் பேரழகு வாய்ந்த ஒரே நேரத்தில் ஆயிரம் பெண்களை மணக்க வேண்டும் என்று எண்ணி தொள்ளாயிரத்து தொன்னூற்றியெட்டு பெண்களைக் கவர்ந்து சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தார் அடுத்த பெண்ணைத் தேடி வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தார் அவருடைய கண்ணில் வேதசாரனின் மனைவி குமுதவதி தட்டுப்படவும் அவரை கவர்ந்து சென்று தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பதாவது பெண்ணாக இமயத்தில் சிறையிட்டார். பின்பு ஆயிரமாவது பெண்ணைத் தேடிப் புறப்பட்டார்.
கருடாழ்வாரின் அகம்பாவம்
வேதசாரன் தன் மனைவியை மீட்டுத்தரவேண்டி பெருமாளை வணங்கி வழிபட்டார். பெருமாளும் வேதசாரனுக்கு உதவி செய்வதற்கு எண்ணினார். எம்பெருமான் இமயமலைக்குச் செல்வதற்கு தன் தயவு தேவைப்படும் என்று கருடாழ்வார் இறுமாப்புடன் இருந்தார். ஆனால் பகவான் கருடாழ்வாரை தன் காலிடுக்கில் வைத்துக் கொண்டு மனோவேகத்தில் பறந்து இமயமலையை அடைந்தார். கருடாழ்வாரின் மனதில் இருந்த ‘தான்’ என்ற அகம்பாவம் அழிந்தது.
ஆனந்த கூத்து
சிறைப்பட்டிருந்த குமுதவதியை சிறை மீட்ட எம்பெருமான் கருட வாகனத்தில் பறந்து வந்து திருக்குளந்தை வந்தடைந்தார் அச்மநாரனாகிய அரக்கனும் பெருமாளைத் தொடர்ந்து திருக்குளந்தை வந்து பெருமாளுடன் போரிட்டார். பெருமாள் அரக்கனைக் கீழே தள்ளி அவருடைய தலை மேலேறி ஆனந்தக் கூத்தாடினார்.
மாயக்கூத்தன்
பெண்களைத் திருடிய சோரனாகிய அரக்கன் மேல் நாட்டியம் ஆடியதால், சோர நாட்டியன் என்றும் மாயக் கூத்தன் என்றும் இத்திருத்தலத்தில் பெருமாள் அழைக்கப்படுகிறார். பெருமாள் திருவடி தலையில் பட்டதும் அரக்கன் சாப விமோசனம் பெற்று கந்தர்வன் ஆனார். இறைவனை வணங்கி விடைபெற்றார்.
இலக்கியச் சிறப்பு:
இத்திருத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது (நம்மாழ்வார் பாசுரம் எண்:2868) ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழியில் பத்து பாசுரங்கள் நம்மாழ்வாரால் இத்தலத்து இறைவன் மீது பாடப் பெற்றுள்ளன.
பெரிய திருவடியாகிய கருடாழ்வார் பறக்கும் நிலையில் சிறகுகளை உயரே தூக்கிக் கொண்டு அழகாக இத்திருத்தலத்தில் காட்சி தருகிறார்.
தனிச் சிறப்பு
இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் நான்காவது தலமாகவும் சனிபகவானின் தலமாகவும் நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்தைந்தாவது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பெருமாளுக்கு இணையராக ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி மற்றும் கமலதேவி என நான்கு தாயார்கள் இருப்பது தனிச் சிறப்பு. பிரகஸ்பதிக்குப் பெருமாள் காட்சி அளித்த தலம்.
அமைவிடம்
திரு வைகுண்டத்திலிருந்து ஏரல் செல்லும் வழியில் அல்லது தூத்துக்குடி-திரு வைகுண்டம் (சாயர்புரம் வழி) செல்லும் நெடுஞ்சாலையில் திரு வைகுண்டத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.