மாலி: இலங்கையில் இருந்து தப்பி வந்து, மாலத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அவர்  இன்று பிற்பகல் அல்லது இரவு சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதனால், அங்கிருந்து வெளியேறி தலைமறைவானவர், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாலத்தீவுக்கு சென்று தஞ்சமடைந்தார். அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து தகவல் அறிந்த அந்நாட்டு மக்கள், ராஜபக்சேவை உடனே நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். அதிபர் மாளிகையையும் முற்றுகையிட்டனர்.  இதனால், கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வேறுநாட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை அல்லது இரவு கோத்தபய தனது மனைவியுடன் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக மாலத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கோத்தபய ராஜபக்சேவை திருப்பி அனுப்பு! மாலத்தீவில் மக்கள் போராட்டம்