மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை  திருப்பி அனுப்ப வலியுறுத்தி  மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலதீவு மக்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, ராஜபக்சேக்கள் குடும்பம் பதவி விலக வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாகவே மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டம் காரணமாக, இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே  மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், அதிபர் பதவியில் கோத்தபய தொடர்ந்து இருந்து வந்தார். அதையடுத்து பிரதமராக ரணிலை நியமித்தார்.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து தப்பியோடினார். அவர் இன்று அதிகாலை மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாலத்தீவு மக்கள், கோத்தபய ராஜபக்சேவை இலங்கைக்கே திருப்பியனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோத்தபயவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.