கொழும்பு,

லங்கையின் கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகிறது. அதையடுத்து, கிழக்கு மாகாண சபை கவர்னரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இலங்கை மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் படி,  மாகாண சபை கலையும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் தேதியை  தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

ஆனால், சமீபத்தில் இலங்கை பாராளுமன்றத்தில், மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்தம் காரணமாக தற்போது தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது திருத்தப்பட்ட விதிகள் காரணமாக,  தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல் தொகுதியின் எல்லைகள் மீண்டும் வரையறுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு  மார்ச் மாதமே தேர்தல்  நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், நீண்ட காலம் கவர்னரின்  அதிகாரத்தின்கீழ் மாகாண சபை இருக்கக்கூடாது என எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றன.

கிழக்கு மாகாண சபையின் முதல்வர்,  ஹாபிஸ் நசீர் அஹமது கூறும்போது, மாகாண சபைகளின் அதிகாரங்களை ஆளுநர் கையாள்வது மக்கள் ஆட்சிக்கு முரணானது என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபையின் துணை அவைத்தலைவரான பிரசன்னா இந்திரகுமார்., “இந்த வாரத்துடன் பதவி காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கு மார்ச் மாத இறுதிக்குள் தேர்தல்கள் நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை” என்று கூறினார்.

மேலும் தேர்தல் தள்ளிப்போவது,  சிறுபான்மை இனங்களுக்கு சாதகமாக அமையுமா என்பதும் கேள்விக்குறியாகிறது என்றும் கூறி உள்ளார்.

 

மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தை காரணமாக காட்டி, இலங்கை அரசு  மாகாண சபைத் தேர்தல்களை குறித்த காலத்தில்  நடத்தாமல் தள்ளிப்போடுவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

“ஆளுநரின் கீழ் மாகாண சபைகள் நிர்வாகத்தை கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு முரணானது” என்று உள்நாட்டு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.