கொழும்பு: இந்தியாவில் தற்போது நடைபெற்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் தேசிய அணி இதுவரை காணாத படுதோல்வியை இலங்கை அணி சந்தித்திருந்தது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியிருந்தன. பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, 15.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களை மாத்திரமே பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 6.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி, 51 ரன்களை பெற்று ஆசியக் கோப்பையை தன்வசப்படுத்தியது.
தற்போது உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் முகாமிட்டு உள்ளது. முதல் போட்டியாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அக்டோபர் 7ந்தேதி டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இது தோல்வியை சந்தித்தது. கடந்த 2ந்தேதி இந்தியாவுடன் மோதிய போட்டியில் இலங்கை அணி டாப் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரும் டக்அவுட் ஆகியுள்ளனார். இதுவரை ஐந்து பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுதோல்வியானது, இலங்கை அணி மீதான நம்பிக்கையை முழுமையாக ரசிகர்கள் மத்தியில் இழக்கச் செய்துள்ளது.
50 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், 1996 உலக கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைத்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கைவிளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமாக அறிவிப்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பதிலாக இடைக்கால குழு ஒன்றை நியமிப்பதாக அவர் மேலும் அறிவித்துள்ளார். இலங்கையை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த இடைக்காலச் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இடைக்கால சபை இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த இடைக்கால சபை நியமிக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் ஊடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால சபையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க கடமையாற்ற உள்ளார். மேலும் எஸ் ஐ இமாம், ரோஹினி மாறசிங்க, அயிரங்கணி பெரேரா ஆகிய ஓய்வு பெற்ற நீதிபதிகள், உபாலி தர்மதாசா, ஹிஷாம் ஜமால்டின் மற்றும் சட்டத்தரணி ராகிதா ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது. தெரிவிக்குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளார்.