சென்னை,

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு வலியுறுத்தி நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் இறுதியாக சமூக விரோதிகளால் வன்முறை களமாக மாற்றப்பட்டது.

சென்னை மக்களின் பொழுதுபோக்கே மெரினா கடற்கரைதான். விடுமுறை தினங்களை குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக கொண்டாட கடற்கரையை நாடியே வருவது வழக்கம்.

 

இந்த நிலையில், அண்மையில் மெரீனாவில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து காவல்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது,

ஏற்கனவே, சாந்தோம் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள  கடற்கரை பகுதிகளில் போராட்டம் நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுதவிர, மாநகரின் முக்கிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை உள்ளது.

பல்வேறு பிரச்னைகளுக்காக, மெரீனாவில் ஒன்றுகூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அண்மையில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தவறான செய்திகளை இளைஞர்கள் நம்ப வேண்டாம்.

அரசியல் கட்சிகள், அமைப்புகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டங் கள்  நடத்த வேண்டுமானால் அதற்குரிய அனுமதியை காவல் துறையினரிடம் முன்கூட்டியே பெற வேண்டியது அவசியம்.

அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களுக்காக, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்.

கடற்கரையில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பகுதிகளில் எந்த விதமான போராட்டமும் இனி நடத்தக் கூடாது.

அதை மீறி போராட்டம் நடத்துவோர் மீதும், சமூக வலைதளங்களில் சட்டத்துக்கு புறம்பான தகவல்களை பரப்புவோர் மீதும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.