சென்னை,

லவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களை ஐ.டி ஊழியர்கள் இன்று காலை சந்திக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஐ.டி.ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுத்துறை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்தனர்.

6 நாட்கள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியதை தொடர்ந்து விலக்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என வற்புறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக கடந்த 23ந்தேதி அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாய மாக போலீசார் அகற்றினர். மேலும் மாணவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து கடற்கரை பகுதிகளில் அமைதியாக நடைபெற்று வந்த  போராட்டம்  வன்முறையாக மாறியது. திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் முன் இருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த வன்முறையில், போராட்டக்காரர்களுக்கு உதவியாதாக நடுக்குப்பம் மீனவ பகுதியில் புகுந்து போலீசார் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து பெண்களை அடித்து உதைத்தனர். வீடுகளுக்கு தீ வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதி போர்க்களமாக மாறியது.

இதன் காரணமாக போலீசாரின் தாக்குதலுக்கு ஆளாகி கடும் சேதமடைந்துள்ள நடுக்குப்பம் பகுதிக்கு சென்னை ஐ.டி. ஊழியர்கள் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் கருத்தை பதிவு செய்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை இளந்தமிழகம் என்ற அமைப்பு செய்துள்ளது.