சென்னை: மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் ஊழியர்களுக்கு பேச்சுத் தமிழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் ஊழியர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பேச்சுத் தமிழ் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்தப் பயிற்சியின் முதல் குழுவுக்கான வகுப்பு இராஜாஜி பவனில் உள்ள தமிழ்நாடு மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் இ நடைபெற்றது. இவ்வகுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் திரு. சஜ்ஜன்சிங் ஆர் சவான் இ.ஆ.ப., தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உதவி இயக்குநர் திருமதி இரா. மதுரா மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து உரையாற்றினர்.

அப்போது,  பேச்சுத்  தமிழ் பயிற்சியானது ஊழியர்களுக்கு  இணையவழியாக நடத்தப்படும். 2 மாத கால அளவிலான இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பங்கேற்பாளர்களுக்குத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். இப்பேச்சுத் தமிழ் பயிற்சி தொடர்பாக மேலும் விவரங்களுக்கு tva@tn.gov.in, tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பேச்சுத் தமிழ் வகுப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஒன்றிய அரசுப் பணியாளர்கள், வங்கி ஊ ஊழியர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தோருக்கு இந்தி வழியில் பேச்சுத் தமிழ் கற்றுத்தரப்படுகிறது. இதற்காக, இந்திவழிப் பேச்சுத் தமிழ் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, அப்பாடங்கள் 14 காணொலிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது இத்திட்டம், மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் பணிபுரியும் வெளி மாநில ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இப்பணியாளர்கள் கணக்கெடுப்பின்போது சரியானத் தகவல்களைப் பெறவும், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையைச் சுமூகமாக நடத்திச் செல்லவும் தமிழ்மொழியை அவர்கள் பேசக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.