சென்னை: மெரினா கடற்கரை மணல் பரப்பில் கடல் அழகை ரசிப்பதற்காக மரப்பலகையிலான சிறப்பு நடைபாதை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.  இது விரைவில் திறக்கப்பட உள்ளது. இது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கு விடுமுறை தினங்கள் மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் சென்று ரசித்து வருகிறார்கள். தினமும் பல ஆயிரம் மக்கள் கடற்கரையில் பொழுது போக்க வருகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களும் கடலை ரசிக்கும் வகையில் பிரத்யேக பாதை அமைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி,மெரினா கடற்கரை அழகை  முதியோர், மாற்றுத்திறனாளிகள் ரசிக்கும் வகையில்  கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் நினைவு இல்லம் எதிரே கடற்கரை மணல்பரப்பில் மரத்திலான சிறப்பு நடைபாதை வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.

இதன்படி 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் பாதை அமைக்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட இந்த பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விரைவில்  இந்த நடைபாதை வசதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதன் மூலம் மெரினா கடல் அழகை எளிதில் ரசிக்க முடியும். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.