சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, இடமாற்றம், புதியதாக பேர் சேர்த்தல் உள்பட வாக்கு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவது வழக்கமான நடைமுறை. அதுபோல, இந்த ஆண்டும்,  அக்டோபர்  முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். இதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.  பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதையொட்டி, தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  அக்டோபர்  27ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  தொடர்ந்து,   நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சிறப்பு முகாம்கள்  இன்று தொடங்கி உள்ளது. அதாவது, நவ.4, 5, 18, 19-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்றும் விண்ணப்பங்களை அளிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணி டிச.9-ம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜன.5-ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் சேர்ப்பு முகாம்  காலை 9.30 மணி – மாலை 5.30 மணி வரை அந்த அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, படிவம் 6; வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க படிவம் 6 பி; பெயர் நீக்க படிவம் 7; திருத்தம் செய்ய படிவம் 8 வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வரை ஆன்லைன் வழியாகவும், அதிகாரிகளிடம் நேரடியாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி, 15,187 உட்பட மொத்தம், 36,142 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதுதொடர்பான நடவடிக்கைளை முன்னெடுக்க  மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டிலேயே சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!