சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியடன் உடன் இணைந்து  கொட்டும் மழையில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஹெல்த் வாக்’ சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஜப்பானில், மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 8 கி.மீ-க்கு ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், அதற்கேற்றவாறு இச்சாலைகள் அமைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி தினமும் 8 கி.மீட்டர் துாரம் அதாவது 10,000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரந்த அழுத்தம் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என அறியப்படுகிறது. மேலும் நடைபயிற்சியானது நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே, பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் நடை பயிற்சி மேற்கொண்டு, உடல் ஆரோக்கியம் பெற்று பயன்பெறலாம்,

நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடை பாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று நலவாழ்வு பேணுவதற்கான நடை பயிற்சியினை (Health Walk) ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும் என்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே  சட்டசபையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 8 கிலோ மீட்டர் தூர சாலைகள், ஹெல்த் வாக் திட்டதுக்காக தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சாலையோரம், பொதுமக்கள் வசதிக்காக சாய்வு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த  “நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்“  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.11.2023 அன்று காணொலி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  முதலமைச்சர் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடலூர் சில்வர் பீச்சில் இந்த திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்து பொதுமக்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.