தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு!

Must read

சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சித்திரை 1ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 13-ந்தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06005) இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்று இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்பு மதுரையிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06006) நாகர்கோவிலில் இருந்து வருகிற 17-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு மதுரை செல்லும். அங்கிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன, 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகள், 2 காப்பாளர் பெட்டியுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article