..தி. மு.க. தலைமை, “நிச்சய வெற்றி” என்று எதிர்பார்த்த தொகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை, எதிர்மறையான முடிவைக் கொடுத்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான், தோல்வி அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிரச்சி அடையவைத்திருக்கிறது. .
கட்சி அரசியலை மீறி, மக்களிடம் தனி செல்வாக்குள்ள கார்த்திக் தொண்டைமான்  புதுக்கோட்டை மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்.
புதுக்கோட்டை சி.பி.ஐ. கட்சி உறுப்பினர் முத்துக்குமார் விபத்தில் இறக்க, அங்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது அ.தி.மு.க. சார்பாக தொண்டமான் களம் இறக்கப்பட்டார்.
அப்போது புதுகை மக்கள், “நாங்கதான் உங்களைக் கும்பிடணும். நீங்க கும்பிடாதீங்க. எங்க ஓட்டு உங்களுக்குத்தான்” என்றார்கள்.  அதே போல அவரை வெற்றிபெறவைத்தார்கள்.
அப்படி இருந்த மக்கள், கார்த்திக் தொண்டைமானை தோற்கடித்தது ஏன்?
தி.மு.க. தரப்பினர், “மன்னருக்கு மக்கள் செல்வாக்கு உண்டுதான்.  அதே நேரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவரிடம்  எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

கார்த்திக் தொண்டைமான்
கார்த்திக் தொண்டைமான்

புதுக்கோட்டை நகருக்கு முக்கிய திட்டமான  புதை வடிகால் சாக்கடை திட்டத்தை  செயல்படுத்துவேன் என்று கடந்த இடைத்தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார்.  கடந்த 2010ம் ஆண்டே முடிப்பதாக    இதற்கான வேலைகள் இழுத்துக்கொண்டே இருக்கிறது. எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை.
இதே போல் அக்னி ஆறு மற்றும் அம்புலி ஆறுகளை தூர்வாறி கரைகள் பலப்படுத்தப்படும்.. இதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்றார். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
புதுக்கோட்டையில் புநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும், காவிரி, கொள்ளிடம் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும் சுற்றுவட்டசாலை அமைக்கப்படும் என்றெல்லாம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கண்டுகொள்ளப்படவில்லை.
இடைத்தேர்தலில் வென்ற கார்த்திக்தொண்டமான், இத் திட்டங்கள் குறித்து அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. குறைந்தபட்சம்  சட்டமன்றத்தில் பேசியிக்கலாம். அதுவும் இல்லை.
மேலும்  கொள்ளிடம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், சுற்று வட்டச்சாலை,  மாவட்ட மருத்துவமனையை  தரம் உயர்த்துவது என்று அவர கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கடும் மழையால்,  சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆண்டுக்கு 2 கோடி  வீதம் 4 ஆண்டுகளுக்கு  எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 8 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சைக்கிள் ஸ்டாண்ட்,  சிமென்ட் சாலை அங்கன்வாடி,  பேருந்து நிழற்குடை,  கலையரங்கம் போன்ற  பணிகள் அரைகுறையாக நிற்கின்றன. இவற்றை எல்லாம் எம்எல்ஏ ஆய்வு செய்யவில்லை.
இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், பதில் சொல்லாமல் ஒதுங்கிவிடுவார்  கார்த்திக் தொண்டைமான். மக்களையும் சந்திப்பதில்லை. அதனால்தான் இந்தத் தேர்தலில் மக்கள் அவரைத் தோற்கடித்துவிட்டார்கள்” என்றார்கள் தி.மு.க. தரப்பினர்.
அ.தி.மு.க. தரப்பினரோ, “ஒருமுறை எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் பல்கலைக் கழகங்களை துவக்குகிறார்கள். ஆனால் மன்னரோ சமீபத்தில் தனது சொத்து ஒன்றை நாலரைக் கோடிக்கு விற்றார். இப்படி தனது சொத்தை விற்று அரசியல் செய்பவர்.  அவர் தோற்றதற்குக் காரணம் ஜாதி அரசியல்தான்” என்றார்கள்.
கங்கையம்மாள் - சொக்கலிங்கம்
கங்கையம்மாள் – சொக்கலிங்கம்

 
 
தாக்கப்பட்டு மருத்துவமனையில்...
தாக்கப்பட்டு மருத்துவமனையில்…

அந்த விவகாரம் இதுதான்.
புதுகை மாவட்டத்தில் பரவலாக வாழ்பவர்கள், களப்பிரமன்னர்களின் வழித்தோன்றல்களான முத்துராஜா சமூகத்தினர்..  இவர்களைப் பற்றி ஒருமுறை தி.மு.க. தலைவர் கருணாநிதி,  “முத்துராஜாக்கள் எப்போதும் இலையில் குத்தும் ராஜாக்கள். அவர்கள் ஒருபோதும் உதயசூரியனுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று கூறினாராம்.    அந்த அளவுக்கு அ.தி.மு.க. அபிமானிகள் முத்துராஜா சமூகத்தினர்.
இச் சமூகத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டியைச் சேர்ந்தவர். அப்பகுதி அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர். இவரது மனைவி கங்கையம்மாள், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்.
சில மாதங்களுக்கு முன்…  இருவரும் தங்கள் பகுதி பிரச்சினை தொடர்பாக  புதுகை மாவட்ட எம்.எல்.ஏவும், சுகாதாரத்துறை அமைச்சருமான   சி.விஜயபாஸ்கரை அவரது வீட்டில் சந்தித்தனர்.  அப்போது,  இரு தரப்புக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட.. ஒருகட்டத்தில் சொக்கலிங்கத்தையும் அவர் மனைவியயுயும்  ஜாதி பெயரைக்கூறி அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டியதாக  விவகாரம் எழுந்தது.
இதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சொக்கலிங்கத்தின் ஆதரவாளர்கள் புதுகை பகுதியில்  ஆயிரக்கணக்கான முத்துராஜா இன மக்களை திரட்டி பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காமல், சொக்கலிங்கத்தையும் அவர் மனைவியையும் கட்சியில் இருந்து நீக்கினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதையடுத்து புதுக்கோட்டை தொகுதியில் தங்கள் இனத்தின் சார்பாக, சொக்கலிங்கத்தை களத்தில் இறக்கினர் முத்துராஜா சமூகத்தினர்.
அ.தி.மு.கவுக்கு எதிராக முத்துராஜாக்கள் போராட்டம்
அ.தி.மு.கவுக்கு எதிராக முத்துராஜாக்கள் போராட்டம்

அதோடு ஆளுங்கட்சியினர் விட்டிருந்தால் பரவாயில்லை. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பிய சொக்கலிங்கத்தை அதிமுகவினர் தாக்கினர். இதையடுத்து சொக்கலிங்கமும் அவர் மனைவியும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இருவரையும் தாக்கிய அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சொக்கலிங்கத்தின் ஆதரவாளர்கள், புதுக்கோட்டையிலிருந்து வடவாளம் வழியாக கறம்பக்குடி செல்லும் சாலை, செம்பட்டிவிடுதியில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டிச் சாய்த்து, சாலை மறியல் செய்தார்கள்.  இதனால், அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், இந்த தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புதுக்கோட்டை நகரிலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இத்துடனாவது அ.தி.மு.கவினர் அடங்கியிருக்கலாம். ஆனால், சொக்கலிங்கத்தின் ஆதரவாளரான மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமான 6 ஏக்கரில் பயிரிட்டிருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான கரும்பு தோட்டம் நேற்று தீக்கிரையாக்கப்பட்டது.
சொக்கலிங்கத்தின் மைத்துனரும், முத்தரையர் சங்க ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளருமான சரவணதேவா, ‘இந்த தாக்குதல்களுக்குக் காரணம், கறம்பக்குடி அதிமுக ஒன்றிய செயலாளர்தான்” என்று பகிரங்கமாக புகார் செய்தார்.   ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இதெல்லாம்தான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக காலம்காலமாக இருந்த முத்துராஜா இன மக்களை, அக் கட்சிக்கு எதிரான மனப்பான்மைக்குத் திருப்பியது. இதன் எதிரொலியால்தான் அச் சமூகத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டுக்கள் பெற்று, அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை தோற்கடித்தார்.
புதுகை தொகுதி மட்டுமல்ல  ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்க, முத்துராஜா இன மக்கள் மாற்றி வாக்களித்ததே காரணம். இனியாவது  அச்சமூகத்தினரை அ.தி.மு.க.தலைமை,  சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும்!”
– இதுதான் அ.தி.மு.கவினர் சொல்வது.
அதே நேரம், இந்த சாதி பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர்  விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்று, மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் தீர்ப்பு, கடவுளின் தீர்ப்புக்கு இணையானது என்று சொல்வது உண்டு.
உண்மைதான்.. இரண்டு தீர்ப்புகளின் நோக்கமும் பல சமயங்களில் புரிவதில்லை.

  • புதுகை பில்லா