புதுவை:
புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி  கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் கிரண்பேடி. பணியிலிருந்து ஓயவு பெற்ற பிறகு, காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடினார். அதன் பிறகு  பா.ஜ.க.வில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி களமிறக்கப்பட்டார்.
கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். ஆனால், அத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது.
download
இந்த நிலையில், தற்போது புதுவையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடியை நியமிப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருக்கிறார்.
கடந்தவாரம் தான் தமிழகத்தோடு சேர்த்து புதுவையிலும் சட்டசபைத் தேர்தல் முடிந்தது. இதையடுத்து அங்கு புதிய  ஆட்சி அமைய உள்ள நிலையில், கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் இதுவரை கவனித்து வந்தார்.
கிரன்பேடி நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர்.  டெல்லி திகார் சிறை இவரது பொறுப்பில் இருந்தபோதுதான் பல நல்ல மாற்றங்கள் அங்கு ஏற்படுத்தப்பட்டது.  இதையடுத்து அவருக்கு உயரிய ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.