டில்லி

ஆந்திராவில் சிறப்பு ரெயில்வே மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் ஐதராபாதை தலைமையிடமாக கொண்டு ஒரு ரெயில்வே மண்டலம் இயங்கி வந்தது.   தற்போது தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக உள்ளது.  அதனால் புதிய சிறப்பு ரெயில்வே மண்டலம் ஆந்திராவுக்கு அமைக்க வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது.   அவ்வாறு அமைக்க அப்போதைய மத்திய அரசும் ஒப்புக் கொண்டது.

ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மத்திய பாஜக அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளது.  மேலும் பாஜக வின் கூட்டணியில் இருந்தும் அக்கட்சி விலகக் கூடும் என தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் மத்திய உள்துறை செயலர் ராஜிவ் கௌபா. “தற்போது தேவையான நிதி இல்லாததால் ஆந்திராவுக்கு சிறப்பு ரெயில்வே மண்டலம் அமைக்க முடியாது.   ரெயில்வே அதிகாரிகள் அவ்வாறு சிறப்பு மண்டலம் அமைபதை விட சில சலுகைகள் கொடுக்கலாம் என கூறி உள்ளனர்.” என தெரிவித்தார்.

கடந்த மாதம் ஆறாம் தேதி ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆந்திராவில் புதிய ரெயில்வே மண்டலம் அமைப்பது பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இதை ஆமோதித்துள்ளார்.   ஆனால் மத்திய அரசில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியவுடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ராம்மோகன் நாயுடு, நாங்கள் ஏற்கனவே, விஜயவாடா, விசாகப் பட்டினம், குண்டூர், மற்றும் குண்டக்கல் ரெயில்வே மண்டலங்களை இணைத்து புதிய சிறப்பு மண்டலம் அமைக்க ஆலோசனை தெரிவித்துள்ளோம்.   இதை உடனடியாக அமுல்படுத்துவதால் மாநிலத்தின் நிதி நிலை உயர வாய்புள்ளது”  என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்ற உறுபினர்கள் ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் இந்த கோரிக்கையை அளித்துள்ளனர்.   மேலும் இது போல அனுமதி மறுப்புக்கு காரணமும் கேட்டுள்ளனர்.   அவரிடம் இருந்து இதுவரை இது குறித்து எந்த கருத்தும் வரவில்லை.