டெல்லி:

சோனியா, ராகுலுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பு குறைக்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து,  மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும்  திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு, ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு படையினர் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் மரணத்தை தொடர்ந்து, எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சோனியாகாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட முன்னாள் பிரதமர்கள் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாதுகாப்பை  28ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மோடி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றுள்ளது. தற்போது அவர்களுக்கு மற்ற விஐபிப்போல இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கை இன்று மக்களவையில் எதிரொலித்தது.  மக்களவையில்  பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  சோனியா காந்தி ஜி & ராகுல் காந்தி ஜி சாதாரணமானவர்கள் அல்ல என்று கூறியவர்,  காந்தி குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) பாதுகாப்பை வாஜ்பாய் ஜி அனுமதித்திருந்தார். 1991-2019 முதல், என்.டி.ஏ இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது, ஆனால் அவர்களின் எஸ்.பி.ஜி கவர் ஒருபோதும் அகற்றப்படவில்லை. ஆனால் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இது கண்டனத்துக்குரிய என்று கூறினார்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுகவும், மத்தியஅரசின் எஸ்பிஜி வாபஸ் பெறப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும்  திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.