தனிப்பாதை கண்ட ஜாம்பவான்

..

வழக்கமான பாணியை உதறித் தள்ளி விட்டு மாற்றிப் போட்டு ஆடுவதில் போடுவதில் கில்லாடி இயக்குனர் கே. பாலச்சந்தர்.

தனது மகள் நேசிக்கும் ஒரு பெரிய மனிதரின் மகன் தன்னை நேசிக்கும் சிக்கலுக்கு ஆளாகும் ஒரு பெண்..

 

 

திருமணம் முடிந்து இருந்தால் பையன் மாமனார் ஆகிவிடுவான்.. மகள் மாமியார் ஆகிவிடுவாள். படிக்கும்போதே தலைசுற்றும்.. அதுதான் பாலச்சந்தர்.

அருவருக்கத்தக்க பக்கங்களை கதைகளில் திணித்து சமுதாயத்தை கேவலமாக சித்தரித்தவர் என்ற சர்ச்சைக்குள்ளான ஜாம்பவான் இயக்குனர் ஒருவர் என்றால் அது பாலச்சந்தர் ஆகத்தான் இருக்கும்.

ஆனால் கதாபாத்திரங்களின் உண்மை தன்மையை நிலை நிறுத்துவதற்காக சசமரசமே செய்து கொள்ளாத மகத்தான இயக்குனர் என்ற பெருமை பெற்ற ஜாம்பவானும் அவரேதான்.

ரஜினி கதாநாயகனாக நடித்த கருப்பு வெள்ளை திரைப்படம், தப்புத்தாளங்கள். ஆண்களின் புறம்போக்குதனத்தையும் பாலியல் தொழில் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் ஓரளவுக்கு நன்கு அலசிய படம்.

ஒரு பெண் தரகன்.. அனுப்பிவைக்கும் பெண்களை ஜீவனாகவே பார்க்கமாட்டான்.. அனுப்பி கமிஷன் பணம் பார்ப்பது மட்டுமே அவனுக்கு இலக்கு..

ஒரு நாள் பணக்காரன் ஒருவனின் அவசரத்திற்காக இவன் எவ்வளவோ முயன்றும் ரெகுலர் பெண்கள் பிசி என்பதால் கிடைக்கவேமாட்டார்கள்..

கடைசியில் சக தரகனை தேடி அணுகும்போது, தன் வசம் “இளம் புதுவரவு” உள்ளதாக கூறவே கூட்டி வருவதற்காக அவன் பின்னாடி செல்வான்.

ஆர்வத்தோடு சென்று அவன் காட்டும் லாட்ஜ் அறைக்குள் பார்ப்பான். அங்கே ஒரு இளம்பெண் மெதுவாக திரும்புவாள்..

அவள் வேறு யாருமல்ல தரகன் பாடுபட்டு வளர்த்து கல்லூரியில் படிக்க வைக்கும் அவனுடைய ஒரே செல்ல மகள்..

மறுநாள் தரகன், மனைவி, மகள் மூவரும் தற்கொலை செய்துகொண்டு பிணமாகக்கிடப்பார்கள்..

பெண்ணை கூட்டி அனுப்பிவைக்கும் தொழில் செய்யும் தரகனுக்கு அவமானம் என்பது பெரிய விஷயம் அல்ல. அவமானம் என்பதைவிட மகள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் தற்கொலைக்கு காரணம் என்பதை அழகாக சித்தரித்திருப்பார் கே பாலச்சந்தர்.

மன்மதலீலை படத்திலும் நச்சுனு ஒரு சீன் இருக்கும். தெருவில் கௌரவமானவர்கள் என போர்வையில் திரியும் குடும்பஸ்தர்கள் பலரும் அதே தெருவில் ஒரு பெண்ணிடம் ரகசியமாக போய் வருவதை நாசுக்காக சித்தரித்திருப்பார்.

அரசியலையும் பாலச்சந்தர் தனது படங்களில் விட்டு வைத்ததில்லை.

“இவனுங்க கடையை திறந்து குடின்னா குடிக்கனுமாம். கடையை மூடிட்டு உடனே குடிக்காதீங்கன்னு சொன்னா அத நாம கேட்டு உடனே விட்றுன்னுமாம்.. என்னங்கடா அக்கப்போரு பண்றீங்க?”

அரசாங்கங்கள் தங்கள் இஷ்டத்திற்கு திடீரென மதுவிலக்கு கொண்டு வருவதையும் பின்னர் திடீரென ரத்து செய்வதையும் உன்னால் முடியும் தம்பி படத்தில் குடிகார ஜனகராஜ் பாத்திரம் மூலம்நன்றாகவே சாடியிருப்பார்.

எம்ஜிஆர் ஆட்சியின் போது தண்ணீர் பஞ்சத்தை மையமாக சித்தரித்து தண்ணீர் தண்ணீர் படமெடுத்தார். கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

இத்தனைக்கும் பின்னாளில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்பட்ட கே பாலச்சந்தரை, தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர்தான்.

மத்திய அரசில் பணிபுரிந்துகொண்டு மேடை நாடகங்களில் கலக்கி வந்த பாலச்சந்தருக்கு, தனது தெய்வத்தாய் (1964) படத்தில் வசனகர்த்தா வாய்ப்பு வழங்கி திரையுலகை திறந்துவிட்டார் மக்கள் திலகம்.

உண்மையான திறமை எல்லா காலத்திலும் ஜொலிக்கும் என்பதற்கு அடையாளம் அடுத்த படமான சர்வம் சுந்தரம். படத்தை இயக்கியது கிருஷ்ணன்- பஞ்சு இரட்டையர் என்றாலும், நாகேஷின் நடிப்புக்கு அடுத்தபடி ஜமாய்த்தது கே.பாலச்சந்தரின் வசனமே..

நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநர் சீட்டில் முதன்முறையாக அமர்ந்த பாலச்சந்தருக்கு நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெமினி, சவுகார் ஜானகி, முத்துராமன் என அற்புதமான நட்சத்திர கூட்ட ணி கைகொடுத்தது.

பாமா விஜயம், எதிர்நீச்சல், புன்னகை, இருகோடுகள் என வெற்றிப்பயணம் அமர்க்களமாகவே போனது.

தமிழகத்தின் இரு பெரும் திலகங்கள் ஆன எம்ஜிஆர் மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆக வரி முற்றிலுமாக தவிர்த்து தனக்கென ஒரு பாதையை போட்டுக்கொண்டார் பாலச்சந்தர்.

ஆனால் எழுபதுகளில் திடீரென நடிகர் திலகத்துடன் கைகோர்த்தார் பாலச்சந்தர். லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனும் இந்த படத்தில் சேர்ந்து கொள்ள, மிகுந்த எதிர்பார்ப்பு.

ஆனால் எதிரொலி படம் படுதோல்வி. இதன்பிறகு சற்றே சுதாரித்துக்கொண்டார்.

பல புதுமுக நட்சத்திரங்களை அறிமு கப்படுத்தி சகலத்தையும் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டார்..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இரண்டும் கெட்டான் வயதில் தவித்துக்கொண்டிருந்த கமலுக்கு ஹீரோ அந்தஸ்த்தில் அரங்கேற்றம் படம் மூலம் பெரிய பிரேக் தந்தார் பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதா,, அபூர்வ ராகங்கள் படத்தில் துண்டுரோலால் ராஜபாட்டை கிடைக்கப்பெற்ற. இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி, மன்மத லீலையில் அறிமுகமாகி இந்திய திரையுலகம் முழுவதும் பவனி வந்த ஜெயப்பிரதா,.,, பின்னாளில் பிரகாஷ்ராஜ் என இவரின் நட்சத்திர அறிமுக பட்டியல் சதத்தை தாண்டும் அளவுக்கு மிகவும் நீளமானது..

இவர் இயக்கிய ஜெமினி கணேசனின் சொந்த தயாரிப்பான ‘நான் அவனில்லை’, சகல அம்சங்களையும் கொண்ட விறு விறுப்பான படம். காட்சிகளில் சுவாரஸ்யம் காட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் அது..

இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் சிவகுமார் போன்றோர் தங்கள் பேர் சொல்லவேண்டும் என்றால் பாலச்சந்தரின் சிந்துபைரவி போன்ற படங்களைத்தான் சொல்லவேண்டியிருக்கும்..

மூன்று முடிச்சு, அவர்கள், நிஜல் நிஜமாகிறது என எம்எஸ்வி- கண்ணதாசன் கூட்டணியோடு கறுப்பு வெள்ளைகளில் மாஜிக் பாடல்களோடு அசத்திய பாலச்சந்தர் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவும் தவறவில்லை..

கமல், ரேவதி நடிப்பில் இளையராஜா இசையில் அவர் நிகழ்த்திய பிரமிக்க தக்க படைப்பான புன்னகை மன்னன் படமே இதற்கு சாட்சி..

இன்னொரு குறும்புத்தனமும் இவரிடம் உண்டு.. தன் படங்களையே மீண்டும் உட்டாலக்கடி செய்து அழகன், கல்கி என தடாலடி செய்துவிடுவார்.

பட்டிணபிரவேசம், நூல்வேலி போன்ற படங்களெல்லாம் காட்சி அமைப்புகளுக்காக, பாடல்களுக்காக அணுஅணுவாய் ரசிக்கத்தக்கவை.

ஒரு பதிவில் அடக்கிக் காட்டுகிற அளவுக்கு பாலச்சந்தர் சின்ன சாதனையாளர் அல்ல.

கமல், ரஜினிக்கு திரையுலக காட்பாதரும், தாகேபால்கே விருது பெற்றவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 9-வது நினைவு தினம் இன்று.

Thanks to Elumalai Venkatesan