ஸ்லாமாபாத்

ந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்த விமானத்துக்கு மட்டும் பாகிஸ்தான் வானில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   அதன் பிறகு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது.    அதற்கு பிறகு இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்கு மேல் பறக்க பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

இந்த தடையால் தினம் 350 விமானங்கள் தாமதமாக பயணம் செய்து வருகின்றன,     யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது பல விமான சேவைகளை இதனால் ரத்து செய்து விட்டது.   ஏர் இந்தியாவுக்கு தினமும் அதிகப்படியான எரி பொருள் செலவால் ரூ. 5 முதல் 7 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.    பாகிஸ்தானுக்கும் இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் தனியாக பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் செய்திகள் வந்தன.    சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானம் பாகிஸ்தான் வான் வழியே சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இதை பாகிஸ்தான் வெளிநாட்டு துறை அமைச்சக அதிகாரி முகமது ஃபைசல் உறுதி செய்துள்ளார்.   அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பயண நேரத்தை குறைக்க அவர் விமானத்துக்கு மட்டும் அனுமதி அளிக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும் அதனால் அவர் விமானத்துக்கு போகவும் வரவும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது விமான சேவை நிறுவனங்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அதை ஒட்டி அவர்கள் அனைத்து விமானங்களுக்கும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.   பாகிஸ்தான் அரசு அதை ஆலோசித்து வருவதாகவும் வரும் 30 ஆம் தேதி முதல் இந்த தடை நீக்கப்படலாம் எனவும் அதிகார பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.