புதுடெல்லி:
ஊரடங்கு உத்தரவு காரணமாக, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர அடுத்த மாத துவக்கதில் சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களுக்கு உதவும் விதமாக, அடுத்த மாத துவக்கதில் சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான முயற்சியை தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியை தொடங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக, பிரதமர் மோடியுடன் மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனையின் முடிவில், முதல் கட்ட நடவடிக்கையாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய அழைத்து வரும் வேளையில், அவர்களுக்கான மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ஒதுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கு முழுமையாக நிறைவடைந்த பின்னர் இவர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று இதுகுறித்து பேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்ப உள்ளவர்களின் எண்ணிக்கையை அரசு கணக்கிட்டுள்ளது. அதில், ஒரு லட்சம் பேர் கேரளாவுக்கு திரும்புவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி டெல்லி, மகாராஷ்டிரா பஞ்சாப், தெலுங்கானா, ஆந்திரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த வெளிநாட்டினர் பெருமளவில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.